கருங்கல் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி
கருங்கல் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி காட்டுவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி ரஜிலா (வயது48). இவர் கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் கருங்கலில் ஒரு பள்ளியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்துக்கு சென்றார். கூட்டம் முடிந்த பின்பு வீட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார். கஞ்சிக்குழி காட்டுவிளை ஆர்.சி. ஆலயம் அருகே வந்த போது பின்னால் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் திடீரென ரஜிலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் ரஜிலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். இதற்கிடையே மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த ரஜிலாவை பொதுமக்கள் மீட்டு கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.