பிரிந்து சென்ற கணவர் தொந்தரவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


பிரிந்து சென்ற கணவர் தொந்தரவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 Sept 2023 4:44 AM IST (Updated: 3 Sept 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

பிரிந்து சென்ற கணவர் தொந்தரவு செய்வதை தாங்கி கொள்ள முடியாமல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

கணவருடன் தகராறு

சேலம் மாவட்டம் ஓமலூர் கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. இவருடைய மகள் மோகனா (வயது 32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு சில ஆண்டுகளில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மோகனா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனா வீட்டுக்கு வந்த குணசேகர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி வந்து தொந்தரவு செய்து வந்தாராம். இதுகுறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் மோகனா புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் நாளுக்கு நாள் குணசேகரின் தொந்தரவு அதிகமாக இருந்ததால் நேற்று காலை மண்எண்ணெய் கேனுடன் மோகனா சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தீக்குளிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதனை தொடர்ந்து ஓமலூர் போலீஸ் நிலையம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் வருவதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மோகனா அங்கு சென்று போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story