ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் மொபட் மீது லாரி மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி
ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் மொபட் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊட்டி
ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் மொபட் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டல் வியாபாரம்
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுகுணா (வயது 42). இவர்களுக்கு சிவசங்கரி (15) என்ற மகளும், யுவன் சங்கர் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதில் சிவசங்கரி பிறந்தது முதல் கை ஊனம் என்பதால் அவரை சுகுணா மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தார்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் சில காலமாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒண்டிப்புதூர் பகுதியில் சுகுணா சிறிய அளவில் தனியாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஊட்டிக்கு சுற்றுலா
இதைத்தொடர்ந்து சுகுணா நடத்தி வந்த ஓட்டலில் சென்னையை சேர்ந்த ராஜா (45) என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர் சமையல் மாஸ்டராக மட்டுமின்றி ஓட்டலுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ண ஜெயந்தியைஒட்டி அரசு விடுமுறை என்பதால், ஓட்டலில் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்று முடிவு செய்து குழந்தைகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா வர சுகுணா திட்டமிட்டார். இதன்படி சுகுணா, தனது 2 குழந்தைகள் மற்றும் ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வந்த ராஜா ஆகிய 4 பேரும் மொபட்டில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். மொபட்டை ராஜா ஓட்டினார்.
லாரி மோதியது
காலை 5 மணிக்கு கிளம்பி அவர்கள், 8.30 மணிஅளவில் ஊட்டி -குன்னூர் இடையே உள்ள மந்தாடா பகுதியில் வந்தனர். அப் போது பின்னால் கட்டுமான பொருட்கள் ஏற்றி வேகமாக வந்த லாரி மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ராஜா ஓட்டிச் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய ராஜா மற்றும் சிறுமி சிவசங்கரி ஆகிய 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அதேபோல் சுகுணா மற்றும் அவருடைய மகன் யுவன் சங்கர் ஆகியோர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டிரைவர் கைது
இது குறித்த தகவலின் பேரில் கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த சிறுமி உள்பட 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து லாரி டிரைவரான குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த புதியராஜ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் பலர் ஊட்டிக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர்.