லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வந்தவாசி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் நடராஜன் (வயது 30). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள மதுபான ஆலையில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
வந்தவாசி-காஞ்சீபுரம் நெடுஞ்சாலை விளாங்காடு கிராம கூட்டுச்சாலை அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த நடராஜன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.