லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
சேரன்மாதேவியில் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரன்மாதேவி:
அம்பை, சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் மினிலாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சேரன்மாதேவியில் போலீசாரை கண்டித்து நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேரன்மாதேவி உதவி கலெக்டர் பங்களா செல்லும் வழியில், பைபாஸ் சாலையோரம் சுமார் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி, லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சேரன்மாதேவி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாக கூறி, அடிக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதாகவும், அதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.