போலி வாட்ஸ்- அப் எண் மூலம் மோசடி செய்ய முயற்சி


போலி வாட்ஸ்- அப் எண் மூலம் மோசடி செய்ய முயற்சி
x

போலி வாட்ஸ்- அப் எண் மூலம் மோசடி செய்ய முயற்சி

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை வைத்து போலி வாட்ஸ் அப் எண் தொடங்கி பண மோசடி செய்ய நடைபெற்ற முயற்சி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்-அப் தகவல்

கோவை மாவட்ட கலெக்டராக சமீரன் உள்ளார். இந்த நிலையில் கலெக்டர் சமீரன் போட்டோ வைத்த வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள பிற அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று காலை திடீரென்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனை பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் உடனடியாக அமேசான் நிறுவனத்தில் கிப்ட் கூப்பன் வாங்கி தனது வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கோவை கலெக்டரின் தொடர்பு எண் பல அதிகாரிகளிடம் ஏற்கனவே உள்ளது. இந்த புதிய வாட்ஸ்-அப் எண்ணை பார்த்ததும் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக கலெக்டர் சமீரனை தொடர்பு கொண்டு வாட்ஸ்-அப்-ல் வந்த செய்தி குறித்து தெரிவித்தனர்.

அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் தான் அப்படி யாருக்கும் வாட்ஸ்-அப் தகவல் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் உஷார் அடைந்த கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அந்த வாட்ஸ்- அப் எண்ணை முடக்கும்படி கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் கலெக்டர் தனது பெயரில் தொடங்கப்பட்ட போலி வாட்ஸ்-அப் எண் குறித்து தனது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மேலும் இதுகுறித்து கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸ்- அப் எண் எனக்கூறி மர்ம நபர்கள், பிற அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணமோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. மேற்கண்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலெக்டரின் பெயர், புகைப்படத்துடன் தெரியாத வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும், ஏதேனும் பொய்யான தகவல்கள் வந்தால் பொதுமக்கள் அதுகுறித்து போலீசில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் விசாரணை

இந்த போலி வாட்ஸ் அப் எண் குறித்து கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வாட்ஸ்- அப் எண்ணிற்கு பயன்படுத்தப்பட்ட சிம், மராட்டிய மாநிலத்தில் வாங்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. எனவே வடமாநிலங்களை சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முன்பு கலெக்டர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி அதன்மூலம் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டது. தற்போது அந்த கும்பல் போலி வாட்ஸ்-அப் எண் மூலம் பண மோசடியில் ஈடுபட முயற்சிக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.




Next Story