ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் - டி.டி.வி.தினகரன்
ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
மதுரை,
மதுரையில் அரசரடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களில் பிறந்திருக்கிறோம். ஆனால், அனைவரும் இந்தியர்கள், மனிதர்கள் என்பதை உணர்ந்து மனித தன்மையோடு வாழ வேண்டும்.
அன்பும், நேசமும் தான் மனித குலம் அமைதியாக வாழ வழி வகுக்கும். மதங்களால், சிலர் மதம் பிடித்து மனிதர்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதத்தின் அடைப்படையில் உலகம் பிரிந்து தீவிரவாதம் தலை தூக்குகிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற பிறகும் தீவிரவாதம் மனித குலத்தை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்திருக்கிறது. இது வருத்தமான விஷயம்.
குறிப்பாக ஆன்மீகம் என்பது எல்லா மதங்களையும் கடந்தது என்பது தான் உண்மை. சில சுயநலவாதிகள், ஆன்மிகத்தில் அரசியலை புகுத்துகிறார்கள். இதனால் தான் பல பிரச்சினைகள் வருகிறது.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சிறுபான்மையாக இருக்கும் மற்ற மதத்தினரையும் பாதுகாத்து, இந்தியாவை அமைதி பூங்காவாக்க வேண்டும் என்பது தான் காந்தியின் எண்ணம். ஆனால், பதவி வெறியால் மதங்களை காட்டி மக்களிடையே பிரிவினை உருவாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.