தூத்துக்குடி கல்லூரியில்முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி:அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் மாணவிகள் சந்திப்பு
தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி கடந்த 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இக்கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவியான, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் கலந்து கொண்டு, கல்லூரியில் படித்த போது மறக்க முடியாத தனது நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
அப்போது, பெண்களுக்காக தனிக் கல்லூரி அமைக்க வேண்டும், கிராமப்புற பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி வருகிறது. ஒவ்வொரு மாணவியின் வெற்றிக்கு பின்னால், இங்குள்ள பேராசிரியர்களின் உழைப்பு உள்ளது. தமிழ் வழியில் படித்துவிட்டு, இந்த கல்லூரிக்கு வந்து ஆங்கில வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புரியும் வகையில் பேராசிரியர்கள் கற்றுக்கொடுத்து, விரைவில் ஆங்கில வழியில் பயிலுவதற்கு ஏற்றவாறு மாற்றிவிடுவர். அதனால்தான் இன்றும் சிறந்த கல்லூரிகளின் வரிசையில் இந்த கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியின் கல்விப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
மலரும் நினைவுகள்
நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க.சுப்புலட்சுமி தலைமையில் கணிதத்துறைத்தலைவர் கி.பழனி, உதவி பேராசிரியர் து.ராதா, வேதியியல் துறைத்தலைவர் கோகிலா சுபத்ரா, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நீதா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.