தூத்துக்குடிசிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


தூத்துக்குடிசிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலில் செவ்வாய்க்கிழமை குழந்தைளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

வித்யாரம்பம்

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் 10-வது நாள் ஆகும். இந்த நாள் எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழி, நாட்டுப்புற கலைகள் போன்றவை கற்பிக்கப்படுகிறது. அதுபோல் இந்த நாளில் குழந்தைகள் கல்வி கற்றுக் கொள்ள தொடங்கினால் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. எனவே விஜயதசமி நாளான நேற்று தூத்துக்குடியில் பக்திபேரவை சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

சிவன் கோவில்

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று காலையில் வித்யா சரசுவதி பூஜை, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். நிகழ்ச்சிக்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்திய ஞானப்பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், சரசுவதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் அகர வரிசையின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகளின் கையைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் அகர எழுத்துக்களை எழுதினர். இதில் காலை முதல் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடியில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளிலும் நேற்று காலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.


Next Story