யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது


யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
x

ஓமலூர் அருகே யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், கத்திகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், கத்திகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன தணிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி அருகே நேற்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கைத்துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் முகமூடிகள், தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் ஆகியவை இருந்தன. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

யூடியூப்பை பார்த்து...

அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் சஞ்சய் பிரகாஷ் (வயது 25), சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் நவீன் சக்கரவர்த்தி (25) என்பது தெரியவந்தது. நண்பர்களான அவர்களில் சஞ்சய் பிரகாஷ் என்ஜினீயர் என்பதும், நவீன் சக்கரவர்த்தி பி.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரிந்தது.

மேலும் கடந்த 6 மாதங்களாக ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கி உள்ளனர். அப்போது அங்கு அவர்கள் யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்துள்ளனர். மக்களை காப்பாற்ற வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துப்பாக்கி தயாரித்து வைத்து இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கைது

இதுமட்டுமின்றி வீரப்பன் மீது அதிக ஈர்ப்பு கொண்ட அவர்கள் ஏதாவது ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 2 கத்திகள, உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நகை, பணம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்களா? அல்லது கொலை செய்ய திட்டம் தீட்டினார்களா? சமூக விரோத செயலில் ஈடுபட திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story