வெறி நாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்


வெறி நாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
x

பேரணாம்பட்டு அருகே வெறிநாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர்

வெறிநாய் கடித்தது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன், கட்டிட தொழிலாளி. இவரது மகன் அர்ஷன் (வயது 3). நேற்று காலை அர்ஷன் வீட்டு முன்பு தெருவில் நின்றதாக கூறப்படுகிறது. அப்போது 4 வெறி நாய்கள் கூட்டமாக வந்தன. அதில் ஒரு நாய் குழந்தை அர்ஷனை காலை பிடித்து இழுத்து சென்று முகம், கை, காலில் கடித்து குதறியது.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறிதுடித்த அர்ஷனின் சத்தம் கேட்டு தாய் ரோஜா, தாத்தா முனிசாமி ஆகியோர் ஓடிச்சென்று கட்டையால் வெறி நாயை தாக்கி குழந்தையை மீட்டனர். குழந்தையை கடித்த வெறிநாய் ஒரு பசு மாட்டையும் கடித்தது. பின்னர் பார்த்தீபனின் சித்தப்பா சுப்பிரமணி (50) என்பவரை இடது காலில் கடித்து குதறியது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த குழந்தை அர்ஷன், சுப்பிரமணி ஆகியோர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அர்ஷன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் எருக்கம்பட்டு கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக 4 வெறி நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த வெறிநாய்கள், தெருவில் உள்ள மற்ற நாய்களையும் கடித்து குதறி வருகின்றன. வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story