அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி...நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது: எல்.முருகன் தாக்கு
உதயநிதி அரசியலில் பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
பொள்ளாச்சி,
கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத ரெயில் சேவை இன்று துவங்கப்பட்டது. கோவை ரெயில் நிலையத்திலிருந்து இந்த ரெயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல். முருகன் கூறியதாவது: - "கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத ரெயில் சேவை வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. ரெயில்வே துறை வேகமாக இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரெயில் நிலைய மேம்பாட்டுக்கு மட்டும் 1,896 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ரெயில் நிலையங்களை உருவாக்க திட்டமிட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. கோவைக்கு மட்டும் 70 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எதுவாக இருந்தாலும் சேவை மனப்பான்மையுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மத்திய அரசு செயல்படுகிறது. வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் அமைச்சர்கள் குழு உடனே களத்தில் இறங்கி ஆய்வு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது. அரசியலில் உதயநிதி கத்துக்குட்டியாக இருக்கிறார். நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சருக்கான தரத்தை உதயநிதி குறைத்து விட்டார்" இவ்வாறு எல்.முருகன் கூறினார்.