'பசுமை சைதை' திட்டத்தின் கீழ் 1 லட்சமாவது மரக்கன்றை உதயநிதி ஸ்டாலின் நட்டார்
‘பசுமை சைதை' திட்டத்தின் கீழ் 1 லட்சமாவது மரக்கன்றை உதயநிதி ஸ்டாலின் நட்டார்.
சென்னையை பொறுத்தவரை 6.5 சதவீதமாக இருந்த பசுமைப்பகுதி 'வர்தா' புயலின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்த காரணத்தால் 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனை அதிகரிக்கும் விதமாகவும், 'மரம் வளர்த்தால்தான் நாடு செழுமையடையும், போதிய மழை பெய்யும், மக்களும் வளமாக இருக்கமுடியும்' என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கூற்றை ஏற்றும் சைதாப்பேட்டை தொகுதியின் மக்களுக்காக, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் 'பசுமை சைதை' என்ற திட்டத்தை தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதே லட்சியம் என உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 'பசுமை சைதை' திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டத்தின் கீழ் 80 ஆயிரமாவது மரக்கன்று நடப்பட்டு, மற்ற எல்லா மரங்களைப் போல தற்போது வரையிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 'பசுமை சைதை' தொடங்கி 5-வது ஆண்டில் அதாவது நேற்று அதன் லட்சியமான ஒரு லட்சம் மரங்கள் என்ற இலக்கை எட்டியிருக்கிறது. அந்த 1 லட்சமாவது மரக்கன்றை சைதாப்பேட்டை-வேளச்சேரி சாலை சின்னமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நட்டார். 'பசுமை சைதை' திட்டம் நீட்டிக்கப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.