உடன்குடி, விளாத்திகுளம் பகுதியில் கனிமவள திருட்டை தடுத்து நிறுத்த கோரிக்கை


தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 3:35 AM GMT)

உடன்குடி, விளாத்திகுளம் பகுதியில் கனிமவள திருட்டை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி, விளாத்திகுளம் பகுதியில் கனிமவள திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தூத்துக்குடி அய்யர்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயகணேசன் மனைவி லிங்கசிவா என்பவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் ஜெயகணேசன் கடந்த 25.5.2023 அன்று காலை தூத்துக்குடி காய்கறி மார்கெட் பகுதியில் கீரை வியாபாரம் முடித்து, அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலியில் கைபட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

என் குடும்ப சூழ்நிலை மற்றும் எனது குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் எனது படிப்புக்கேற்ற அரசு வேலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ஆதரவற்ற விதவை சான்று வழங்கி அதன் மூலம் மாதாந்திர நிதியுதவி வழங்குமாறும், எனக்கு குடியிருக்க, எனது குழந்தைகளை வளர்த்து பராமரிக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வீடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

கல்வி கட்டணம்

அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கட்டாய கல்வி உரிமை சட்டம் 2005-ன் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடம் அளிக்க வேண்டும். இந்த மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களிடம் கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சாலை வசதி

பா.ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு ஆனந்த நகர் மற்றும் முத்தாரம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 53-வது வார்டு ஆனந்த நகர் மற்றும் முத்தாரம்மன் கோயில் தெரு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் பள்ளிக் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று ஸ்பிக்நகர் மெயின் கேட் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தை சாலை விரிவாக்கத்தின் போது இடித்துவிட்டனர். தற்போது பஸ் நிறுத்தம் இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் உடனடியாக புதிய பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஒடிசா தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசன்னா மனைவி மஞ்சுவாலா என்ற பெண் கலெக்டரிடம் அளித்த மனுவில், நானும் எனது கணவரும் கடந்த 2004-ம் ஆண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இங்கே வந்தோம். 19 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம். ஒடிசா மாநிலத்துடன் தற்போது எந்த தொடர்பும் இல்லை. எங்களது ஒரே மகள் லட்சுமி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பில் கோவில்பட்டி அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம். பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால் எங்கள் சாதி தமிழ்நாட்டில் இல்லை என கூறி சான்றிதழ் தர இயலாது என்கின்றனர். அனைத்து ஆவணங்களும் இங்குள்ள முகவரியிலேயே இருப்பதால் ஒடிசாவிலும் சான்றிதழ் வாங்க முடியவில்லை. சாதி சான்றிதழ் காரணமாக எனது மகளின் படிப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, கலெக்டர் தலையிட்டு எனது மகளுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

காயல்பட்டினம் காமராஜர் நற்பணிமன்ற தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், காயல்பட்டினம் நகராட்சி லட்சுமிபுரம் 9-வது வார்டு பகுதியில் மூன்று தெருக்களில் 16 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், தெருவிளக்குகளும் எரியவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கனிமவளம் திருட்டு

தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் மு.ராசேசு, தமிழ்த் தேசத் தன்னுரிமைக்கட்சித் தலைவர் அ.வியனரசு ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், உடன்குடி மற்றும் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி பகுதியில் தங்கு தடையின்றி கனிமவள திருட்டு நடைபெறுகிறது இந்த பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு கனிமவள திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறி உள்ளனர்.


Next Story