மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மக்களை திசை திருப்பும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களை திசை திருப்பும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசுவதாக விமர்சித்துள்ளார். ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். மதத்தை மதிக்க வேண்டும். அது எந்த மதமாக இருந்தாலும் சரி மதத்தை இழிவுபடுத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.