சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுவது மக்களை திசை திருப்பும் முயற்சி
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுவது மக்களை திசை திருப்பும் முயற்சி
கோவை
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுவது, மக்களை திசை திருப்பும் முயற்சி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களை திசை திருப்புகிறார்கள்
சனாதன பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. அனைத்து தொழில்களும் படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று மக்களை வாட்டி வதைக்கின்ற இந்த சூழலில் சனாதனம் ஒழிப்பு என்ற பிரச்சினையை தி.மு.க.வினர் கையில் எடுத்துள்ளனர். சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுவது மக்களை திசை திருப்பும் முயற்சி. இதற்காக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
அ.தி.மு.கவை பொருத்தவரை மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போதைய ஜனாதிபதி முர்மு ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அவர்களை எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் தி.மு.க.வினர்.
பல்லடம் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4 பேரை துடிக்க, துடிக்க வெட்டி கொன்று உள்ளனர். அன்று மட்டும் 9 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதற்காக நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
கடன் வாங்கியது சாதனை
உதயநிதி ஸ்டாலின் தன்னை முன்னிலைப்படுத்த பார்க்கிறார். வாரிசு அரசியலுக்கு இங்கு இடம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தன்னை நாட்டிலேயே முதன்மையான முதல்-அமைச்சர் என்றும், இந்தியாவிலேயே சூப்பர் முதல்-அமைச்சர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஏன் தேர்தலை கண்டு பயப்படுகிறார். முதல்-அமைச்சரின் மிகப்பெரிய சாதனை என்பது தமிழ்நாடு அதிக கடன் வாங்கியுள்ளதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் கோவையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம்.
தினத்தந்தி சிந்துபாத்
கோடநாடு வழக்கு தொடர்பாக நான் ஏற்கனவே பலமுறை பதில் கூறி விட்டேன். முடியாத தொடரான தினத்தந்தி சிந்துபாத் கதைபோல் இது உள்ளது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்றே அவருக்கு தெரியவில்லை. தி.மு.க.வை ஆதரித்து பேசுகிறார்.எதிர்த்தும் பேசுகிறார். அவரிடம் தான் நீங்கள் போய் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.