திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதும் பயணிகள்


திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதும் பயணிகள்
x
திருப்பூர்

-

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. உடுமலையில் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோவில் விழாக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அடிக்கடி சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்லும் பமணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இந்த ரெயிலில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள்கூட்டம் அதிகமாக உள்ளது.

அலைமோதும் பயணிகள்

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு வரும்போதே இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

அத்துடன் அந்த ரெயில் உடுமலைக்கு வந்ததும், இங்கிருந்து செல்லும் பயணிகள் எந்த பெட்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா? என்று அங்கும் இங்கும் அலைமோதுகின்றனர். ரெயில் புறப்பட்டு விடுமே என்று ஏதாவது ஒரு பெட்டியில் ஏறிக்கொள்கின்றனர்.ஆனால் உட்காருவதற்கு இடம் கிடைக்காத நிலையில் நின்று கொண்டு செல்கின்றனர். உட்கார்ந்து செல்லும் சில பயணிகள் பழனி, மதுரை ரெயில் நிலையங்களில் இறங்கும்போதுதான், உடுமலையில் இருந்து நின்று கொண்டு செல்கிறவர்களுக்கு உட்கார இடம் கிடைக்கிறது.

அதனால் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story