உலகளந்தபெருமாள், வீரட்டானேஸ்வரருக்கு தீர்த்தவாரி


உலகளந்தபெருமாள், வீரட்டானேஸ்வரருக்கு தீர்த்தவாரி
x

திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள், வீரட்டானேஸ்வரருக்கு நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக உற்சவத்தையொட்டி சாமி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு சென்று அங்கு கடலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சாமி தீர்த்தவாரிக்காக கடலூர் செல்லவில்லை. இந்த நிலையில் தற்போது கோவில் கோபுரத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தாண்டு சாமிக்கு தீர்த்தவாரி கோவிலிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாசி மகத்தையொட்டி சாமிக்கு தீர்த்தவாரி கோவில் தீர்த்த குளத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாள், சக்கரத்தாழ்வார் கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் உத்தரவின் பேரில் கோவில் பவர் ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.

வீரட்டானேஸ்வரர்

இதேபோல் திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கண்டாச்சிபுரத்தில் உள்ள ராமநாதேஸ்வரருக்கு குளக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர், உற்சவர் சந்திரசேகர் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே கெடிலம் நதிக்கரையில் மாசி மக திருவிழா நடைபெற்றது. இதில் எறையூர்பாளையம் வேணுகோபாலசாமி உள்பட பல்வேறு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story