மானாவாரி உளுந்து சாகுபடியில் பூச்சி தாக்குதலால் பயிர் சேதம்
குடிமங்கலம் பகுதியில் மானாவாரி உளுந்து சாகுபடியில் பூச்சி தாக்குதலால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மானாவாரி
குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு மானாவாரியில் சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்துப் பயிர்களில் பூச்சிகள் தாக்கி இலைகளை சேதப்படுத்தி வருகிறது. பயிர்களின் சமையலறையாகக் கருதப்படும் இலைகள் சேதப்படுத்தப்படும் பொழுது பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பூச்சி தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற உரிய வழிகாட்டல்களை வேளாண்துறையினர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குடிமங்கலத்தையடுத்த ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து கூறியதாவது:-
வானம் பார்த்த பூமியாக உள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக உளுந்து சாகுபடி மேற்கொண்டு வருகின்றோம். எங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களிலிருந்தே விதைகளைப் பெற்று சேமித்து வைத்து அடுத்த ஆண்டில் அதே விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு வருகின்றோம். நடப்பு ஆண்டில் முழுவதுமாக பருவமழையை நம்பி உளுந்து சாகுபடி செய்துள்ளோம்.ஆனால் மழைப்பொழிவு போதுமான அளவில் இல்லை.இதனால் மகசூல் குறையும் நிலை உள்ளது.
வாழ்வாதாரம்
அதேநேரத்தில் பூச்சி தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பயிர் சேதம் ஏற்பட்டு மகசூல் இழப்பை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும். மேலும் மானாவாரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள், உரம், பூச்சி மருந்து போன்றவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் உழவு, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என அனைத்துவிதமான செலவுகளும் அதிகரித்து வருகிறது. விலைவாசியும் உயர்ந்து வரும் நிலையில் மண்ணையும் மழையையும் நம்பியிருக்கும் எங்களைப்போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மானாவாரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்புத் திட்டங்கள் வகுக்க வேண்டும். மேலும் அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் வேளாண்மைத்துறையினர் களப் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.