பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்

புதுப்பிக்கப்பட்ட எந்திரங்களுடன் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் காகுப்பத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மின் மோட்டார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற ரூ.45 லட்சம் மதிப்பில் 19 புதிய மின் மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட எந்திரங்களுடன்நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்று அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம், மின் மோட்டார் செயல்படும் விதம், தண்ணீர் வெளியேற்றும் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதோடு பணியில் கவனத்தோடு செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஆத்மலிங்கம், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை மற்றும் பலர் உடனிருந்தனர்.