பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகராட்சியுடன் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைசார்பில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

விரைந்து முடிக்க

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி நகராட்சிகளில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் நகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் ரூ.263 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் நகர் பகுதியில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் சுகாதாரமான சுற்றுப்புறம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இப்பணியினை விரைந்து முடித்திடவும், பணிகள் நடைபெறும்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பணிகள் அனைத்தும் தரமான முறையில் அமைவதை நகராட்சி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சி.பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story