தெருக்களில் ஓடிய பாதாள சாக்கடை கழிவுநீர்


தெருக்களில் ஓடிய பாதாள சாக்கடை கழிவுநீர்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீரேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுது ஏற்பட்டு, பாதாள சாக்கடை கழிவுகள் தெருக்களில் ஓடியதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

தேனி

பாதாள சாக்கடை கழிவுநீர்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் உள்ள 33 வார்டுகளில் உள்ள சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பங்களாமேட்டில் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள கழிவுநீரேற்றும் நிலையத்துக்கு வருகிறது.

அங்குள்ள ராட்சத கிணற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் விழும். அங்கிருந்து கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு கழிவுநீர் தாமரைக்குளம் கண்மாயில் நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

வீடுகளில் உள்ள கழிப்பிடம், குளியல் அறை, சமையல் அறை ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் கசிவு ஏற்படும் பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. நேற்று முன்தினம் இரவில் கழிவுநீரேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால், இரவிலேயே அங்குள்ள ராட்சத கிணறு நிரம்பியது.

தொற்றுநோய் அபாயம்

நேற்று காலையில் பங்களாமேடு சடையால்நகரில் உள்ள தெருக்கள், பங்களாமேடு 2-வது தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை குழாயில் உள்ள மூடிகள் வழியாக கழிவுநீர் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கழிவுநீர் பீய்ச்சியடித்தபடி வெளியே வந்தன. இதனால், மூடிகளின் மீது கற்கள் வைக்கப்பட்டன. வெளியேறிய கழிவுநீர் தெருக்களிலும், வீடுகளுக்கு அருகில் உள்ள காலியிடங்களிலும் குளமாக தேங்கியது. கடுமையான துர்நாற்றம் காரணமாக மக்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு வீட்டுக்குள் சிறைபட்டனர்.

பின்னர் பழுதான மோட்டாரை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த ஒரு வார காலத்துக்கு அப்பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தவும், தற்போது தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் இதுகுறித்து கேட்டபோது, "மோட்டார் பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது. கழிவுநீர் தேங்கிய தெருக்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காய்ச்சல் கண்டறியும் பணிகளும் நடத்தப்பட உள்ளது" என்றார்.


Next Story