மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள்விண்ணப்ப நிலையை அறிய 8 இடங்களில் உதவி மையம்:கலெக்டர் தகவல்


மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள்விண்ணப்ப நிலையை அறிய 8 இடங்களில் உதவி மையம்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் விண்ணப்ப நிலைய அறிய தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயனாளிகளாக தேர்வு செய்யப்படாதவர்களுக்கு அதன் காரணம் குறித்து நேற்று முன்தினம் முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். பயனாளிகளாக தேர்வு செய்யப்படாத நபர்கள் தேர்வு செய்யப்படாமைக்கான காரணம் குறித்தும், மேல்முறையீடு செய்வது குறித்தும் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறிந்து கொள்வதற்கு தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் உதவி மையங்கள் நேற்று முதல் தொடங்கின.

அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (04546 -250101), பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகம் (04546 -231256), உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் (04554- 265002), தாலுகா அலுவலகங்களான தேனி (04546- 255133), ஆண்டிபட்டி (04546 -290561), பெரியகுளம் (04546 -231215), போடி (04546 -280124), உத்தமபாளையம் (04554- 265226) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை, அந்த மையங்களுக்கான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். உதவி மையங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். உதவி மையங்களுக்கு தகவல் கோரி நேரில் செல்லும் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story