சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் ஒன்றிய குழுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் ஒன்றிய குழுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ஒன்றிய குழுக்கூட்டம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்பிரகாசம், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழுத் தலைவர், புதிதாக வாகனம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து மாதாந்திர வரவு செலவுகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

விவாதம்

பின்னர் கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது.

இதில் கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அனுமதி அளிக்காததால் வேலங்குடியில் இருந்து மகிபாலன்பட்டி செல்லும் சாலை வேலங்குடியில் இருந்து கொன்னத்தான்பட்டி செல்லும் சாலையை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து புதிய சாலை அமைக்க கோரினார்.

கவுன்சிலர் சகாதேவன், குறிஞ்சி நகரிலிருந்து ரணசிங்கபுரத்திற்கும் மாதவன் நகர் கொளுஞ்சிபட்டியில் இருந்து காட்டாம்பூர் செல்லும் சாலை பழுது அடைந்துள்ளதால் புதிய சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மேலும் குறிஞ்சி நகர் பகுதியில் மயான வசதி அமைத்து தரவும் அப்பகுதியில் மின் தட்டுப்பாடு இருப்பதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரவும் பேசினார்.

ஆக்கிரமிப்பு

கவுன்சிலர் கலைமகள் பேசுகையில், நெடுமரம் கிராமத்தில் குடிநீருக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதாக கூறினார்.

மேலும் நெடுமரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.


Next Story