வடசென்னை அனல்மின் நிலையத்தில் 3-வது அலகில் டிசம்பர் மாதம் மின் உற்பத்தி


வடசென்னை அனல்மின் நிலையத்தில் 3-வது அலகில் டிசம்பர் மாதம் மின் உற்பத்தி
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும் 3-வது அலகில் டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

வடசென்னை அனல்மின் நிலையத்தில் புதிதாக கட்டப்படும் 3-வது அலகு கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். உடன் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதியால் 3-வது அலகு, அதாவது 800 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 2019-ம் ஆண்டே மின் உற்பத்தியை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படாததால் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

டிசம்பர் மாதம் உற்பத்தி

இந்த திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ரூ.8 ஆயிரத்து 723 கோடி மதிப்பிலான இந்த பணிகள் 83 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ள பணிகள் அடுத்த 6 மாதத்தில் அதாவது வருகிற டிசம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு, வணிக ரீதியில் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 500 மெகா வாட்டாக இருந்த தமிழகத்தின் சராசரி மின்சார தேவை தற்போது 16 ஆயிரத்து 500 மெகா வாட்டாக அதிகரித்து உள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் வினியோக கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

நவீன தொழில்நுட்பம்

அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 220 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் முதல் உற்பத்தியை தொடங்குவது வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது அலகாக இருக்கும்.

வடசென்னை 3-வது அலகு நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், குறைந்த அளவிலான நிலக்கரி மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவைப்படும் 8 ஆயிரத்து 200 டன் நிலக்கரிக்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.

தூத்துக்குடி, சேலம், வடசென்னை அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படாமல் தேவைப்படும் மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story