ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மணிப்பூர் தொடர் வன்முறை, பாலியல் கொடுமைகள், தீ வைப்பு, கொலைகளை கண்டித்தும், மணிப்பூர் முதல்-மந்திரி பதவி விலக்கோரியும், அமைதியை ஏற்படுத்த தவறிய மணிப்பூர் மாநில, மத்திய அரசை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை கைவிடக்கோரியும் மணிப்பூர் ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள், சமூக அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை.திவ்யநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து சின்னப்பா பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை வந்த பின்பு அங்கு கோஷங்களை எழுப்பினர். அதை தொடர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கதவை சாத்தினர். இதனால் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்கள் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய தலைவர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இல்லாததால் கலெக்டர் வந்த பின்பு மனு கொடுக்கலாம் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊர்வலத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.ராமசுப்புராமன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி, தி.மு.க. நகர செயலாளர் செந்தில், காங்கிரஸ் நகர தலைவர் இப்ராகிம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story