மேல்பாதி கோவில் பிரச்சினை:கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியதுஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு ஒரு தரப்பினர் மனு


மேல்பாதி கோவில் பிரச்சினை:கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியதுஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு ஒரு தரப்பினர் மனு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. அப்போது ஆஜரான ஒரு தரப்பினர், தங்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு மனு அளித்தனர்.

விழுப்புரம்

கோவில் பூட்டி சீல்வைப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமைவாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். இப்பிரச்சினை தொடர்பாக 8 கட்டங்களாக இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியும் இரு தரப்பினருக்கும் எந்தவித சுமூகமான உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையிலும், அந்த கோவிலை கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தினால் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமூக முடிவு எட்டவில்லை

இதையடுத்து கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் கடந்த மாதம் 9-ந் தேதி, விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோட்டாட்சியர் வரவழைத்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின்போதும் இரு தரப்பிலும் சுமூக முடிவு எட்டப்படாததால் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் விழுப்புரத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கோட்டாட்சியராக பிரவீனாகுமாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இந்த சூழலில் அவர், மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் பிரச்சினை தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சில விவரங்களை கேட்டறிந்தார்.

2-ம் கட்ட விசாரணை

அதன் பின்னர் அவர், 2-ம் கட்ட விசாரணை ஜூலை 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்ததோடு, இந்த விசாரணையில் ஒரு தரப்பை சேர்ந்த (அ பிரிவு தரப்பினர்) முக்கியஸ்தர்களான 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் அந்த தரப்பை சேர்ந்த 5 பேர், தங்கள் தரப்பு வக்கீலுடன் நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. விசாரணைக்கு ஆஜரான அவர்கள் 6 பேரிடமும் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தற்போதைய நிலைப்பாடு குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினார். அப்போது கோட்டாட்சியருடன் விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

காலஅவகாசம் கேட்டு மனு

இந்த விசாரணையின்போது, அவர்கள் தங்களுடைய நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்தும் விளக்கம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்குள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று தடை விதித்து கோவிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. எனவே அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் வரை எங்கள் தரப்பு ஆட்சேபனையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். அதன் பிறகு விசாரணை முடிந்து அவர்கள் வெளியே வந்தனர்.

மற்றொரு தரப்புக்கு அழைப்பு

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, மேல்பாதி கோவில் வழிபாடு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே இரு தரப்பினரிடமும் முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இன்று ஒரு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினரை வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றனர்.


Next Story