யு.பி.எஸ்.சி. தேர்வை 251 பேர் எழுதினர்
வேலூரில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 251 பேர் எழுதினர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ.), கடற்படை அகாடமி (என்.ஏ.) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (சி.டி.எஸ்.) தேர்வுகள் நாடு முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வுகளுக்காக வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, எத்திராஜ் மெட்ரிக் பள்ளி என்று 2 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த தேர்வை எழுத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 458 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு மையங்களுக்கு காலை 8 மணி முதல் தேர்வர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை எழுத்துத்தேர்வுக்கு 225 பேர் விண்ணப்பித்திருந்தனர். 113 பேர் தேர்வு எழுதினர். 112 பேர் பங்கேற்கவில்லை. தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி எழுத்துத்தேர்வுக்கு 233 பேர் விண்ணப்பித்திருந்தனர். 138 பேர் தேர்வு எழுதினார்கள். 95 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.