தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் யுபிஎஸ்சி தேர்ச்சி விகிதம் சரிவு - காரணம் என்ன?
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான 2021 யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை,
ஒரு காலத்தில் தமிழக்த்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 2010-ல் தமிழகத்தில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர். 2013ல் 150 பேரும், 2014ல் 118 பேரும், 2015ல் 85 பேரும், 2016ல் 78 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
2016ல் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்தது. 2018ல் 45 பேரும், 2019ல் 60 பேரும், 2020ல் 36 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் தனியார் துறைகளில் நல்ல சம்பளத்தில் அதிக வேலை உருவாகியுள்ளதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான ஈர்ப்பு குறைந்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழித்திறன் குறைவாக இருப்பதும் தேர்ச்சி விகிதம் குறைய ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. முன்பு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை முன் தயாரிப்பில் ஈடுபடும் போக்கு பரவலாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகள் கூட தயாரிப்பில் ஈடுபட யாரும் தயாரில்லை என்று பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
விரைவில் வேலையில் சேர வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துள்ளதால், நீண்ட வருடங்கள் முன் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதாக கூறுகின்றனர்.