சரக்கு ரெயில் மூலம் 1,147 டன் யூரியா வந்தது


சரக்கு ரெயில் மூலம் 1,147 டன் யூரியா வந்தது
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரிக்கு வந்தது.

தர்மபுரி

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரிக்கு வந்தது. இதை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

யூரியா

தூத்துக்குடி, மங்களூர், மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு மாதந்தோறும் சரக்கு ரெயில்கள் மூலம் உரம், யூரியா வருகிறது. இதை லாரிகளில் பிரித்து அனுப்புவது வழக்கமாகும்.

அதன்படி தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இவற்றை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உர கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், ஸ்பீக் யூரியா மாவட்ட விற்பனை அலுவலர்கள் ரகுவரன், கலைச்செல்வம், தர்மபுரி மாவட்ட மொத்த விற்பனையாளர் பார்த்திபன் மற்றும் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடுமையான நடவடிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் உர கடைகளுக்கு 1,092 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உர கடைகளுக்கு 55 டன் யூரியாவும் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு 60 டன் சூப்பர் பாஸ்பேட், 60.8 டன் அமோனியம் குளோரைடு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பணி நடைபெற்றது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம் கூறுகையில், விவசாயிகள் உரங்களை வாங்கும் போது தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் பெற்று கொள்ள வேண்டும். தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.


Next Story