தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வலியுறுத்தல்


தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வலியுறுத்தல்
x

தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

செந்துறை:

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க கூட்டம் செந்துறை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்க மாநில தலைவர் அறவாழி பேசினார்.

கூட்டத்தில், நகர மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மேலும் தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். அரசே அனைத்து தொழிலாளர்களையும் நல வாரியத்தில் பதிவு செய்திட வேண்டும். உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் பணியாளர் அனைவருக்கும் வார விடுமுறை, தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை வழங்க வேண்டும். தமிழகத்தில் பல ஊராட்சிகளில் சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் தூய்மை காவலர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கும் போக்கை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story