மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்திதமிழகம் முழுவதும் 25-ந்தேதி கதவடைப்பு போராட்டம்- தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு


மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்திதமிழகம் முழுவதும் 25-ந்தேதி கதவடைப்பு போராட்டம்- தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு
x

மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25-ந்தேதி கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

மதுரை


மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25-ந்தேதி கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன் குமார் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய மின்கட்டண உயர்வால் 430 சதவீதம் அதிகரித்து ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் எனவும் அதற்கேற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், எவ்வித காரணமின்றியும் தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

கதவடைப்பு போராட்டம்

மேலும், காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாக செலுத்தச் சொல்லியுள்ளனர். எனவே, மின்கட்டண உயர்வு பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25-ந்தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தி உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம் என்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, முதல்- அமைச்சர் உள்ளிட்டோருக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டமும், தல்லாகுளம் தலைமை தபால் அலுவலம் முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story