உசிலம்பட்டியில் ஒரே நாளில் 233 மி.மீட்டர் மழை பதிவு


உசிலம்பட்டியில் ஒரே நாளில் 233 மி.மீட்டர் மழை பதிவு
x

உசிலம்பட்டி பகுதியில் ஒரே நாளில் 233 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் ஒரே நாளில் 233 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

மரங்கள் விழுந்தன

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதிலும் உசிலம்பட்டி, எழுமலை, சேடப்பட்டி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டுகிறது.

உசிலம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்தநிலையில். நேற்று முன்தினம் இரவில் 3 மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை கொட்டியது. எனவே நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 233 மில்லி மீட்டர் மழை, உசிலம்பட்டி பகுதியில் பதிவாகியது. ஒரு ஆண்டுக்கு உசிலம்பட்டியின் மழையளவு 1000 மி.மீட்டர் ஆகும். ஆனால் தொடர்ச்சியாக ஒரே நாளில் 233 மி.மீட்டரும், 2 நாட்களில் 344 மி.மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக உசிலம்பட்டி பகுதியில் 20 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 4 இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டது.

மின்னல் தாக்கி மாடு சாவு

கரையான்பட்டியைச் சேர்ந்த கருப்பு என்பவரின் பசுமாடு மின்னல் தாக்கி பலியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளை உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கனமழையினால் உசிலம்பட்டி, எழுமலை, சேடப்பட்டி ஆகிய பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மழை விவரம்

இதே போல் மதுரை மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- குப்பணம்பட்டி-101, மதுரை-29.6, சாத்தையாறு அணை-8, மேட்டுப்பட்டி-12, கள்ளந்திரி-8.6, சிட்டம்பட்டி-80.6, புலிப்பட்டி-50.4, மேலூர்-20, இடையப்பட்டி-40, விரகனூர்-17, எழுமலை-57.6, பெரியபட்டி-9.4.


Next Story