ஊத்துக்கோட்டையில் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு


ஊத்துக்கோட்டையில் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
x

ஊத்துக்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 31-ந்தேதி இரவு நடந்தது.

ராபின் தன்னுடைய நண்பர் கமல் என்பவருடன் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பின்னர் இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடித்து ராபினின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை ராபினின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் திட்டவட்டமாக கூறி வந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன் ராபினின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலையாளிகளை எப்படியாவது பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் நேற்று இரவு ராபினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரகாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோரின் தலைமையில் 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டது.


Next Story