மணிமுத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா
கோவை காட்டூரில் மணிமுத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா நடைபெற்றது.
கோவை
கோவை காட்டூரில் உள்ள மணிமுத்து மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி நேற்று காலையில் மணிமுத்து மாரியம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பெண் பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி ஏந்தி காட்டூர் தொட்ட ராயன் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலாவும், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.