தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு விடையாற்றி உற்சவம்


தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு விடையாற்றி உற்சவம்
x

குளித்தலையில் தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

தைப்பூச திருவிழா

கரூர் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி குளித்தலை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர், கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர், முசிறி சந்திரமௌலீசுவரர், வெள்ளூர் திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களில் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இதன் பின்னர் பழங்கள், பூக்கள்கொண்டு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் இக்கோவில்களின் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டன.

விடையாற்றி உற்சவம்

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் அருகே அனைத்து சுவாமிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து 8 ஊர் சாமிகள் கடம்பந்துறை காவிரிக்கரைக்கு கொண்டு செல்லபட்டு நேற்று முன்தினம் இரவு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன்பின்னர் இங்குள்ள திடலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ரிஷப வாகனத்தில் 8 ஊர் சுவாமிகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மதியம் சுமார் 11மணி அளவில் சுவாமிகளின் சந்திப்பு காவிரிக்கரையில் நடைபெற்றது. இதையடுத்து அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் உள்ளிட்ட மற்ற 8 கோவில்களின் சுவாமிகளுக்கும் காவிரி ஆற்றுப்பகுதி, பஸ் நிலையம், கடம்பர்கோவில் உள்ளிட்ட பகுதியில் விடையாற்றி அனுப்பும் உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விடையாற்றி உற்சவத்தில் ஒவ்வொரு ஊர் சுவாமிக்கும் சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றன. இதையடுத்து இந்த 8 ஊர் சுவாமிகளும் அந்தந்த கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சுவாமிகள் சென்ற பகுதிகளில் பல்வேறு அரசு துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் குளித்தலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர்.

வெண்ணைமலை முருகன்

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து நேற்று தைப்பூசத்தையொட்டி கோவில் அதிகாலையே திறக்கப்பட்டது. பின்னர் முருகனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிப்பட்டு சென்றனர். மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை கரூர் போலீசார் செய்திருந்தனர்.

புகழிமலை பாலமுருகன்

புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இக் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெறுவதால், நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் முருகனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,

தீபாராதனை நடந்தது.

அரவக்குறிச்சி-தோகைமலை

அரவக்குறிச்சிமுருகன் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அரவக்குறிச்சி ஊர் பொதுமக்கள் சார்பாக கோவிலில் நேற்று மதியம் முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் அமைந்துள்ள மொட்டையாண்டவர் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடாந்து முருகன் வள்ளி, தெய்வானை தங்ககாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தோகைமலை அருகே கல்லடையில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபராதனை நடந்தது.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நொய்யல்

நொய்யல் அருகே நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

1 More update

Next Story