தொழிற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தொழிற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன், நாகலிங்கம், ரமேஷ், சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் மரகதம் வரவேற்றார்.
கூட்டத்தில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளை ஏற்றும், தேர்தல் வாக்குறுதியின்படியும் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க உரிய ஆணைகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகும்போது அப்பள்ளியில் அந்த பாடப்பிரிவினை மூடும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து கல்வி பெற ஏதுவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணிவரன் முறை செய்ய வேண்டும். அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம், அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா, உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நூலகங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட அரசின் அறிவிப்புகளை வரவேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.