குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கோவை
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏதேனும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தால் மிஷன் இந்திர தனுஷ் என்ற முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில், தடுப்பூசி போடும் முகாம் 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று முகாம் வருகிற 12-ந் தேதி வரையும், 2-வது சுற்று முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரையும், 3-வது சுற்று முகாம் அக்டோபர் மாதம் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும் நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.