அனைத்து கிடேரி கன்றுகளுக்கும் தடுப்பூசி :கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


அனைத்து கிடேரி கன்றுகளுக்கும் தடுப்பூசி :கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 7:19 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கருச்சிதைவு நோயிலிருந்து காக்கவும், பால்உற்பத்தி குறைவை தடுக்கவும் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

கன்று வீச்சு நோய்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட கன்று வீச்சு நோய் (புரூசெல்லாசிஸ்) தடுப்பூசிப்பணி நடந்து வருகிறது. இந்த பணி 14.7.2023 வரை நடக்கிறது. கருச்சிதைவு நோய் என்பது புரூசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்த நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பல காரணங்களினால் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த நோய் மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. இந்த நோயினை தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.

அறிகுறிகள்

கருப்பையில் நோய் ஏற்படும் காரணத்தினால் சினை மாடுகளில் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு ஏற்படும். கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும். பெண் பிறப்புறுப்பில் இருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மேலும் மூட்டு வீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும். கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். இந்த நோய் தாக்குதலினால் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும்.

எனவே கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்தி எந்தவித விடுதலும் இன்றி தங்களுடைய அனைத்து கிடேரி கன்றுகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story