பொள்ளாச்சி கோட்டத்தில் 86,948 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


பொள்ளாச்சி கோட்டத்தில் 86,948 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி கோட்டத்தில் 86,948 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோட்டத்தில் 86,948 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோமாரி நோய்

பொள்ளாச்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு உள்ளனர். கால்நடைகளுக்கு வைரஸ் கிருமிகளால் கோமாரி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பசு மற்றும் எருமை இனங்களை அதிகமாக கோமாரி நோய் பாதிக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய் மற்றும் கால் குளம்புகளில் கொப்பளங்கள் ஏற்பட்டு உணவு சாப்பிட முடியாமல் சிரமப்படும்.

மேலும் இந்நோய் மற்ற கால்நடைகளுக்கும் பரவக்கூடும். நோய் பாதித்து குணமடைந்த கால்நடைகளில் பால் உற்பத்தி குறைவதுடன், சினை பிடிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கால்நடை வளக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பை தடுக்க தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குழு அமைப்பு

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலமாக பொள்ளாச்சி கோட்டத்தில் 86 ஆயிரத்து 948 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கால்நடை உதவி டாக்டர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் மற்றும் செயற்கை கருவூட்டாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தினமும் ஒவ்வொரு குழுவினரும் 150 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம், பால் சேகரிப்பு நிலையங்கள், ஊராட்சி மூலமாக தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 21-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பனப்பட்டி

கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி போடும் பணி 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையை சேர்ந்த டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் என 3 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் கூறுகையில், கோமாரி தடுப்பூசி போடும் பணி 1-ந் தேதி தொடங்கி, வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. கால்நடை பராமரிப்புக் குழுவினர் கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள கால்நடைகளை பரிசோதித்து வாய்சப்பை நோய் தாக்குதல் கண்டறியப்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story