வைகை அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு
பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்து வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 942 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணிக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 368 கனஅடியாக அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்று இரவு 9 மணியளவில் 66 அடியாக உயர்ந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வைகை அணை நீர்மட்டம் 66 அடியானதால், கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.