நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தென்திருப்பேரை:
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று நவதிருப்பதி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பெருமாள் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதி கோவில்கள்
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த தலங்களில் சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவபிரான், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் என ஒன்பது சிறப்பு பெற்று விளங்குகின்றன.
வைகுண்ட ஏகாதசி
இந்த நவத்திருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று அனைத்து நவத்திருப்பதி தலங்களிலும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேவியருடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒரே நாளில் 9 பெருமாளையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே 9 நவத்திருப்பதி தலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சயனக்கோலம் கலைத்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7.30 மணியளவிலும், தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் இரவு 10 மணியளவிலும் நடந்தது. இதில் வைகுண்டம் கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆழ்வார்திருநகரி கோவில் செயல் அலுவலர் அஜித், தென்திருப்பேரை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவைகுண்டம் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.