வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது


வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கனமழை

மலைப்பிரதேசமான வால்பாறையில் மே மாதத்தில் கோடை மழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் கடந்த மாதம் முதல் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை முதல் வால்பாறையில் வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து மாலை 4 மணி வரை கனமழையாக கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரை வாகனங்கள் பீய்ச்சி அடித்தபடி சென்றன.

மகசூல் அதிகரிப்பு

வால்பாறையில் காலை முதல் வெயில், மதியத்திற்கு பின்னர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நடப்பு மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. வழக்கமாக மே மாதம் வறட்சி காரணமாக தேயிலை மகசூல் பாதிக்கும். இதனால் எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுத்து விடுவார்கள். ஆனால், நடப்பாண்டில் மகசூல் அதிகரித்து இருப்பதால், பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி, வால்பாறையில் 2 செ.மீ. மழை பதிவானது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்குவதற்கான காலநிலை ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, வால்பாறை பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.


Related Tags :
Next Story