40 சதவீத மானியத்தில் மதிப்புக்கூட்டு எந்திரங்கள்


40 சதவீத மானியத்தில் மதிப்புக்கூட்டு எந்திரங்கள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம்மதிப்புக்கூட்டு எந்திரங்கள் 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மதிப்புக்கூட்டு எந்திரங்கள் 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

40 சதவீத மானியத்தில்

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டு எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை தங்கள் பகுதியிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டு எந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தல் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோலுரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் ஆகிய மதிப்பு கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் தனிநபர் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படுகிறது.

ஆழ்துளை கிணறு

மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார்களை அமைக்கும் திட்டம் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள், சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அமைக்கும் விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த இரு திட்டங்களிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் அமைக்கும் புதிய ஆழ்துளை கிணறு, புதிய மின் மோட்டார் வாங்கி பொருத்த அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள உப கோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவிலான செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story