ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து வேன் மோதல்; ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்-2 குழந்தைகள் காயம்
ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து வேன் மோதியதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்-2 குழந்தைகள் காயமடைந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து இவரது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலையொட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று திடீரென எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. பின்னரும் அந்த வேன் நிற்காமல் சென்று சண்முகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் சண்முகம் மற்றும் 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதனைக்கண்ட அந்த பகுதியினர் ஓடிச்சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.