வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செங்கல்பட்டு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1,977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

பூங்காவில் நிரந்தர பணியாளர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் பூங்காவில் உள்ள சிங்கம், வெள்ளை புலி, யானை, மனிதகுரங்கு, சிறுத்தை, காண்டாமிருகம், நீர்யானை உள்பட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை தினமும் செய்து வருகின்றனர்.

பூங்காவில் மொத்தம் 7 நீர்யானைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நீர்யானனைகள் மற்றும் அதனுடைய இருப்பிடத்தை பராமரிக்கும் பணியில் பூங்காவின் நிரந்தர பணியாளர் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டேரி பகுதியை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல உயிரியல் பூங்காவுக்கு வேலைக்கு சென்ற குமார் நீர்யானைகள் இருப்பிடத்திற்கு சென்றார். நீர் யானைகள் உலாவரும் தண்ணீர் தொட்டிகளை 15 நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம்.

நேற்று தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த நீர்யானைகளை ஊழியர் குமார் வழக்கமாக அவர் பேசும் மொழியில் அதனுடைய இருப்பிடத்தில் அடைப்பதற்கு முயற்சி செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஒரு பெண் நீர்யானை திடீரென ஆவேசம் அடைந்து ஊழியர் குமாரை விரட்டி சென்றது. இதை பார்த்தவுடன் சுதாரித்து கொண்ட ஊழியர் குமார் அலறி அடித்துகொண்டு நீர்யானை இருப்பிட சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி விடலாம் என்று நினைத்து சுற்றுச்சுவர் மீது ஏறும்போது திடீரென அந்த பெண் நீர்யானை குமாரின் இடுப்பு பகுதியை கவ்வியது.

இதில் நீர்யானையின் பற்கள் குமார் அணிந்து இருந்த ஆடையில் மாட்டி நீர்யானையிடம் சிக்கி கொண்டார். உடனே நீர்யானை ஊழியர் குமாரை கீழே தள்ளியது.

குமார் சத்தம் போட்டபடியே நீர்யானையிடம் இருந்து தப்பித்து பிழைப்பதற்காக தரையில் படுத்து கொண்டார். ஆனால் ஆவேசமடைந்த நீர்யானை குமாரின் பின்பக்க பகுதி, முதுகு, கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்ததில் நீர்யானையின் பற்கள் குமாரின் உடலில் பல பகுதிகளில் இறங்கியது.

குமாரின் அலறல் சத்தம் கேட்டு பூங்காவில் இருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து நீர்யானையை விரட்டினர். படுகாயம் அடைந்த குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஊழியர்கள் பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குமாரை பூங்கா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு நேரில் சென்று காயம் அடைந்த ஊழியரின் நிலைமை குறித்து சிகிச்சையளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பூங்காவில் நீர்யானை இருப்பிடத்தில் பணிபுரிந்த ஊழியரை நீர்யானை தாக்கிய சம்பவம் பூங்காவில் மற்ற விலங்குகள் இருப்பிடங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூங்கா ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

பூங்காவில் நிரந்தரப் பணியாளர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். நிரந்தர பணியாளர்கள் மட்டுமே ஆபத்தான விலங்குகளை பராமரிக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் அரசு வழங்குகிறது. பூங்காவில் நிரந்தரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான விலங்குகளை பராமரிக்கும் பணியில் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பூங்கா நிர்வாகம் பணி நிரந்தரம் செய்தால் பூங்காவில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அச்சம் இல்லாமல் விலங்குகள் இருப்பிடங்களில் பணிபுரிய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆற்றுக்குதிரை



ஆற்றுக்குதிரை என்று அழைக்கப்படும் நீர்யானை, ஒரு காலத்தில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் பரந்து காணப்பட்டது. பல நாடுகளில் அழிந்துவிட்ட இந்த உயிரினம் தற்போது உகாண்டா, கென்யா, சூடான், உள்ளிட்ட நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

நிலவாழ் உயிரினங்களில், யானை மற்றும் காண்டாமிருகத்திற்கு அடுத்து 3-வது பெரிய உயிரினம் நீர்யானை ஆகும். குதிக்க தெரியாத உயிரினமான நீர்யானை நிலத்தில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் ஓடவும், நீரில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நீந்தவும் செய்யும். பகல் முழுவதும் நீரில் கழித்து, இரவு வேளையில் நீர்நிலை ஓரங்களில் புற்களை மேயும்.

ஆண் நீர்யானை 7½ வயதிலும், பெண் நீர்யானை 3 அல்லது 4 வயதிலும் பருவ வயதை எட்டும். இனச்சேர்க்கை, குட்டி ஈனுதல் மற்றும் குட்டி பால் குடித்தல் அனைத்தும் நீருக்கு அடியிலேயே நடைபெறும். 8 மாத கர்ப்ப காலத்தை கொண்ட நீர்யானை, தனது குட்டிகளை ஒரு வருடம் வரை தன்னுடன் வைத்து பராமரிக்கும்.

இதுவரை வண்டலூர் பூங்காவில்


1985-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீர்யானை இருப்பிடத்தில் பணிபுரிந்த ஊழியர் ஜீவா என்பவரை நீர்யானை தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பணிபுரிந்த வீரராகவன் என்ற ஊழியர் காயம் அடைந்து உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து சிறுத்தை இருப்பிடத்தில் பணிபுரிந்து வந்த வள்ளியம்மாள் என்ற பெண் ஊழியரை சிறுத்தை தாக்கியதில் அவரும் உயிரிழந்தார். இதே போல பூங்காவில் மான் கொம்பால் குத்தியதில் புனித வேல் என்ற ஊழியர் பலியானார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூங்கா விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் சிறுத்தைக்கு உணவு வைத்த போது பழனி என்ற ஊழியரை சிறுத்தை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதே போல 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வங்க புலிக்குட்டி தாக்கியதில் விஜயா என்ற பெண் ஊழியர் காயம் அடைந்தார். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செங்குரங்கு இருப்பிடத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பால்ராஜ் குமார் என்ற ஊழியரை செங்குரங்கு கடித்ததில் காயம் அடைந்தார். தற்போது குமார் என்ற ஊழியரை நீர்யானை தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story