கன்னியாகுமரிக்கு 'வந்தே பாரத்' ரெயில் இயக்க வேண்டும்; ரெயில் பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்க கூட்டம்
நெல்லை மாவட்ட ெரயில் பயணிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஏர்வாடியில் நடந்தது. தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபு நவாஸ் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் நயினா முகமது, பொருளாளர் முகைதீன் என்ற முத்துவாப்பா, துணைத்தலைவர்கள் சேகர், லாசர், சதீஷ்குமார், பாசித்அலி, குலாம்முகமது ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கூடுதல் ரெயில்கள்
கூட்டத்தில், தென் மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே துறையை வலியுறுத்துவது, தென்னக ெரயில்வே பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.சிங்க்கு வாழ்த்து தெரிவிப்பது, ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை தென் மாவட்ட மக்களின் நலன் கருதி கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
நெல்லையில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து செல்லும் மும்பை ரெயிலை தினசரி இயக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மதுரை-கன்னியாகுமரி இரட்டை வழி பாதையை விரைவாக முடிக்க வேண்டும். நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிக அளவில் பயணிகள் ெரயில் இயக்க வேண்டும். திருவனந்தபுரம், நாகர்கோவில் பயணிகள் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணைச் செயலாளர் சந்தானகுமார் நன்றி கூறினார்.