சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும்; தென்னக ரெயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி
சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வந்தே பாரத் ரெயில்
பல நாடுகளில் அதிவேக ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் என விமானங்களுக்கு இணையான நவீன சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரெயில் சேவைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்துக்குள் முதலாவது வந்தே பாரத் ரெயில், சென்னை- கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
சென்னை- நெல்லை இடையே
இதை ஏற்று சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரெயிலில் முதல்கட்டமாக 552 பயணிகள் பயணம் செய்யும் வகையில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிகிறது. இதேபோல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது என்பதால் 8 பெட்டிகளிலும் இருக்கைகள், உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரெயில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என தகவல் வெளியானது. இது விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் மற்றும் இங்கு வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது. ஏனெனில் விழுப்புரம் மாவட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களிலும் மற்றும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரும்பாலும் விழுப்புரத்தில் இருந்து ரெயில் பயணமாகவே சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரெயில் நிலையம் திகழ்ந்து வருவதாலும், இந்த ரெயில் நிலையம் ஏ தரச்சான்று பெற்ற ரெயில் நிலையமாகவும், ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும் இருந்து வருவதால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நிறுத்தப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசுக்கும், ரெயில்வே துறைக்கும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விழுப்புரத்தில் நின்றுசெல்லும்
இந்நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கப்படும் என்றும், இந்த ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்றுசெல்லும் என்றும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வந்தே பாரத் ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக விழுப்புரத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 12.02 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மதியம் 1.50 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.37 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
மேலும் மணிக்கு 83.30 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலானது, சென்னை- திருநெல்வேலி இடையேயான 652.49 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரெயில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து நெல்லைக்கு சோதனை ஓட்டமாக விடப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.