வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதம்


வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதம்
x

வேங்கைவயல் வழக்கில் 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 12-ந்தேதி நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணைக்காக சிறுவர்களின் பெற்றோர் கோர்ட்டில் ஆஜராகிருந்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சிறுவன் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து சிறுவர்கள் பள்ளி சென்றதால் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து விசாரணையை நீதிபதி ஜெயந்தி இன்றைக்கு தள்ளி வைத்தார். மேலும் மாலை 4 சிறுவர்களையும், அவர்களது பெற்றோரையும் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இன்று மாலை ஆஜராகினர். 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இறுதி தீர்ப்புக்கு வழக்கை வருகிற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.


Next Story