வரக்கால்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி


வரக்கால்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலரை இடமாற்றம் செய்ததை கண்டித்து வரக்கால்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் அருகே வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பாலமுருகன் பணியாற்றி வந்தார். அவர் நிர்வாக காரணங்களுக்காக புதுக்கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவயித்தனர்.

மேலும் வரக்கால்பட்டு, காராமணிக்குப்பத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசை சந்தித்து, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் எங்கள் ஊருக்கு இலவச மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெற்று கொடுத்துள்ளார். ஆகவே அவரை பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்து, எங்கள் ஊரில் தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதை கோட்டாட்சியர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையில் அவர்களுடன் வந்த வரக்கால்பட்டு ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான ராஜா (வயது 32) என்பவர் திடீரென கீழே வந்து, தான் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற புதுநகர் போலீசார் பார்த்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

தொடர்ந்து அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து தீக்குளிக்க முயற்சி செய்ததாக ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story